அரசு மருத்துவர்கள் போராட்டத்தினை வாபஸ் பெறாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


அரசு மருத்துவர்கள் போராட்டத்தினை வாபஸ் பெறாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 3:29 PM GMT (Updated: 30 Oct 2019 3:29 PM GMT)

அரசு மருத்துவர்கள் போராட்டத்தினை வாபஸ் பெறாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை அடுத்து சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுபற்றிய ஆலோசனை கூட்ட முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது, மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாளை மருத்துவர்கள் பணிக்கு வர வேண்டும்.  அவர்கள் வராவிட்டால் பணிப்பலன்கள் ரத்து செய்யப்படும்.

பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்கள் காலி என அறிவிக்கப்பட்டு, அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.  போராட்டத்தை கைவிடாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  தேவைப்பட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்

அவர்கள் போராட்டத்தினை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.  நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படடுத்த கூடாது.  பணிக்கு வரும் மருத்துவர்களை போராட்டத்தில் ஈடுபடுவோர் தடுப்பது ஏற்புடையது அல்ல.

ஏழை, எளிய மக்களின் வாழ்வை பாதிக்கும் செயலை அரசு வேடிக்கை பார்க்காது.  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு மருத்துவர்களின் பணி மூப்பு சலுகை ரத்து செய்யப்பட்டு விடும்.

முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலித்து வந்தேன்.  1,2,3 வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் உடன்பாடு ஏற்பட்டது.  ஆனால் இன்றைக்கும் சில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பது என் வேண்டுகோள், மருத்துவமனை வாயிலை அடைத்து கொண்டு மருத்துவர்கள் போராட்டம் செய்வது வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Next Story