திண்டுக்கல், கோவையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 2 பேர் சாவு


திண்டுக்கல், கோவையில் ஜல்லிக்கட்டு:  காளைகள் முட்டியதில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 23 Feb 2020 10:15 PM GMT (Updated: 23 Feb 2020 9:52 PM GMT)

திண்டுக்கல் மற்றும் கோவையில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனை, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலில் ஆலய காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை.

பின்னர் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 497 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 267 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், வெள்ளிக்காசு, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த மாடுபிடி வீரராக திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த தாமஸ் (வயது 21) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 8 பேர், பார்வையாளர்கள் 3 பேர், மாட்டின் உரிமையாளர் ஒருவர் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த நத்தம் வேலம்பட்டி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (18) மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இவர், நத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக அவர் தனது வயதை 21 என்று கூறி பதிவு செய்தது தெரியவந்துள்ளது.

இதேபோல், கோவை செட்டிப்பாளையத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நடிகர்கள் பாக்யராஜ், நிழல்கள் ரவி, மயில்சாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் உள்பட பலர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், மாடு முட்டியதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாடுபிடி வீரர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 25) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 95 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து 962 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 27 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள இடையாத்தூர் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 753 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 225 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது.

Next Story