சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - ஐகோர்ட்டு எச்சரிக்கை


சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - ஐகோர்ட்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2020 10:30 PM GMT (Updated: 27 Feb 2020 9:46 PM GMT)

சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும் என்ற உத்தரவை மாவட்ட கலெக்டர்கள் நிறைவேற்ற தவறினால், தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, 

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவமுத்து என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிமம் பெற்ற, உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் இருந்து பெற்றது. பின்னர், சட்டவிரோதமாக, உரிய உரிமம் இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளை இழுத்து மூடவேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது. மேலும், நடவடிக்கை எடுக்காத கலெக்டர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி ஆலைகள் குறித்த பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், மொத்தமுள்ள 261 ஆலைகளில் உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 132 ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பரிந்துரை செய்துள்ளதாகவும்,அதில் 13 ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவை சரியாக அமல்படுத்தாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை அர்த்தமற்றதாக உள்ளது. நிலத்தடி நீரை எடுக்கும் ஆலைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை. இதற்காக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும், அதற்காக ஒரு குழுவை அமைக்க 2019-ம் ஆண்டு செப்டம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அட்வகேட் ஜெனரல் கூறினார். ஆனால், அப்படி எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை.

இந்த வழக்கு பொதுநல வழக்கு. இதில் தனிப்பட்ட நிறுவனங்கள் தங்களை இணைக்க வேண்டும் என்று கோரி பல மூத்த வக்கீல்கள் ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கு இயற்கை வளங்களை பாதுகாக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு. தனிப்பட்டவர்களுக்காக அல்லாமல் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளில் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூனிட்டுகளை (கிணறு, போர்வெல்) மட்டுமே மூடவேண்டும். முழு ஆலையையும் மூடக்கூடாது என்று ஏற்கனவே ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவேண்டும். எனவே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை மார்ச் 2-ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். மேலும் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

இந்த விஷயத்தில் எந்த துறையும் மன்னிப்பு கேட்கக்கூடாது. உத்தரவை 32 மாவட்டங்களிலும் அமல்படுத்தி மார்ச் 3-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கலெக்டர்கள் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story