டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது? - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது? - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 Feb 2020 11:45 PM GMT (Updated: 27 Feb 2020 11:39 PM GMT)

டாஸ்மாக் மதுபான கடைகள் அமைப்பதற்கு முன்பு அப்பகுதி “மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு தடை விதிப்பதற்கு கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக மாறுபட்ட தீர்ப்புகளை ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வுகள் வழங்கின. இதையடுத்து இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே மேற்கொள்கிறது. மது அருந்துவது தனி மனித சுதந்திரமாக உள்ளது. எனவே ஒட்டுமொத்த சமூகநலனில் அக்கறை கொண்டு டாஸ்மாக் மதுபானக்கடை வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கிராம சபைகள் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்கும் விதமாக ஏன் சட்டதிருத்தம் கொண்டுவரக்கூடாது?.’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “டாஸ்மாக் தொடர்பான பிரச்சினை முழுக்க, முழுக்க அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சினையாக உள்ளது. மாநில அரசு எப்போதும் மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட வேண்டும். குடிமக்கள் ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் காக்க வேண்டியது அரசின் கடமை. டாஸ்மாக் மதுபானக்கடைகள் வேண்டாம் என கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றினால், அதை அமல்படுத்த அரசு ஏன் தயங்குகிறது? என்பதும் புரியவில்லை. மக்கள் நலன் சார்ந்து கிராம பஞ்சாயத்துக்கள் எடுக்கும் முடிவுகளை ஏன் மாநில அரசுகள் செவி சாய்க்கக்கூடாது. தேர்தல் அறிவிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக்கூறும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்தபிறகு அதை அமல்படுத்தாமல் விட்டுவிடுவது ஏன்?. மதுபான விற்பனை அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் கூட, வருங்கால இளைய தலைமுறையின் நலன் சார்ந்தும் சில முடிவுகளை எடுக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 35 சதவீத மதுபானக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரமாக இருந்த மதுபான கடையின் விற்பனை நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டங்களில் ஏற்கனவே 8 வழி பசுமைச்சாலை திட்டம், நீட் தேர்வு ஆகியவைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியபோது, அந்த தீர்மானங்களை சட்டவிதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து வருகிறோம்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘மதுபான கடைகள் அமைப்பதற்கு முன்பு அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது? மது விற்பனையை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை. ஆனால், அந்த துறையின் மூலமாக மதுவிற்பனை நடைபெறுவது வேதனைக்குரியது. கோவில் பகுதியில் அசைவ உணவு கடைகள் நடத்தக்கூடாது என அறிவித்த தமிழக அரசு, மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என ஏன் அறிவிக்கவில்லை?. கடந்த 16 ஆண்டுகளில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறும் தமிழக அரசு, மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைந்து உள்ளது என்று உறுதியாக கூற முடியுமா?‘ என்று கேள்வி எழுப்பினர்.

அதன்பிறகு, ‘டாஸ்மாக் மதுபானக்கடைகள் அமைப்பது தொடர்பான நடைமுறை விதிகள் குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த சுற்றிக்கையை ஏற்க முடியாது என்ற நீதிபதிகள், தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஏப்ரல் 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story