குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2020 9:00 PM GMT (Updated: 28 Feb 2020 7:56 PM GMT)

அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகளைத் தடுக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,


இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் அண்மைக்காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. வெறுப்பு பேச்சும், வெறுப்பு பிரசாரமும் அரசியல் தளங்களிலும், சமூக தளங்களிலும் நுழையும்போது தான் மிகவும் மோசமானதாக மாறுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மோதல்களுக்கு இத்தகைய வெறுப்பு பிரசாரங்கள் முக்கிய காரணமாகும்.

தேர்தலின்போது வெறுப்புப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதைப் போன்று, அனைத்து மக்களுக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை 2018-ம் ஆண்டில் தயாரித்தது. அந்த மசோதாவை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம், வெறுப்புப் பேச்சுகள் குறித்து பேஸ்பரூவா குழு, டி.கே.விஸ்வநாதன் குழு ஆகியவற்றின் அறிக்கைகளையும் ஆய்வு செய்து, 153சி, 505ஏ ஆகிய இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளை வலுப்படுத்தித் தரும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி, சட்ட ஆணையம் திருத்தப்பட்ட பரிந்துரைகளை 2018-ம் ஆண்டு மே மாதத்தில் வழங்கிய போதிலும் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

எனவே, அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகளைத் தடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் 153சி, 505ஏ ஆகிய பிரிவுகளை சேர்ப்பதற்கான குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற, வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story