மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு: ‘அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது’ - மு.க.ஸ்டாலின் அறிக்கை


மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு: ‘அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது’ - மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 14 Oct 2020 10:32 PM GMT (Updated: 14 Oct 2020 10:32 PM GMT)

மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தி.மு.க. தொடர்ந்து வாதாடி வந்தது. இதற்கிடையே, இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய தொகுப்பில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெற உரிமை உண்டு என்று ஜூலை 27-ந் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.

மேலும் அந்த தீர்ப்பில், அடுத்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், 3 மாதங்களுக்குள் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் பற்றி ஆராய கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பு வெளியானதும், இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நான் வலியுறுத்தினேன்.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த வழக்கு 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ‘ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் 22.9.2020 அன்று கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த ஆண்டே மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் பிரதிநிதி முன் வைக்கவில்லை. அடுத்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது’ என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடனே தி.மு.க. மூத்த வக்கீல் வில்சன், ‘ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் வரை அந்த தீர்ப்பிற்கு பாதகமின்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே மருத்துவக்கல்வி இடங்களில் வழங்கிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதன் அடிப்படையில், அதற்கான வழிமுறைகளைப் பெறுமாறு மத்திய அரசு வக்கீலை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவக்கல்வி இட ஒதுக்கீட்டை பெறுவதில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடமும், செயல்பாடும் மிகவும் கவலை அளிக்கிறது. இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற அ.தி.மு.க. அரசு, குட்கா வழக்கிற்கு பயந்தோ அல்லது நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கிற்கு அஞ்சியோ இடஒதுக்கீட்டு துரோகத்தை செய்து இருக்கிறது.

இந்த ஆண்டே இடஒதுக்கீடு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையை போட்டு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலுக்கான கூட்டணி பேரத்தை முன்னிறுத்தி, நம் பதவிக்கு கடைசி நேர ஆபத்துக்களை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்து முதல்-அமைச்சர் செயல்பட்டால் அந்த மாபெரும் துரோகத்தைத் தமிழகம் மன்னிக்காது.

தமிழக இளைஞர்கள் எக்காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். பா.ஜ.க.வுடனான தேர்தல் கூட்டணிக்காக, அ.தி. மு.க. எதையும் விட்டுக் கொடுக்கவும், பலி பீடம் ஏற்றவும் தயாராக இருக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, தி.மு.க. ஏற்கனவே வலியுறுத்தியது போல், மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் மாநில இடஒதுக்கீட்டு உரிமையை இழப்பதற்குத் துணை போகாமல் விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story