மாநில செய்திகள்

“தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி + "||" + "3rd team in Tamil Nadu" - Kamal Haasan interview in Cuddalore

“தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி

“தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தில் 3-வது அணி அமையும் என்று கடலூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கடலூர், 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் வந்த அவர், கடலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குலோத்துங்க சோழன் பெருமாளை தண்ணீரில் மூழ்கடித்த சரித்திரம் நமக்கு தெரியும். இன்று நல்ல அரசு பரிபாலனம் இல்லாமல் சிதம்பரம் கோவிலே தண்ணீரில் மூழ்கியது என்பதை நாம் பார்த்துள்ளோம். தொடர்ச்சியான புயல், கன மழையில் இருந்து ஒவ்வொரு வருடமும் பாடம் கற்றும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல், மீண்டும், மீண்டும் மக்களுக்கு இந்த அவலம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு உயிரோடு விளையாடி கொண்டு இருப்பவர்கள் இவர்கள்.

தமிழகத்தில் எந்த ஊர் சென்றாலும், அரசு மருத்துவமனைகளை நரகங்களாக மாற்றி வைத்துள்ளார்கள். எங்கு ஓய்வெடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்ற கோவிட் காலத்தில், இன்னமும் நிலைமை மோசமாக இருப்பது, அசட்டையான செயல். இவர்கள் மனித உயிர் பற்றிய மதிப்பு இல்லாதவர்கள் என்று புரிகிறது. இவர்கள் வீழ்வார்கள், நிச்சயம் வீழ்வார்கள்.

நல்ல நேர்மையான ஆட்சி நல்ல தலைமையில் இருந்து தான் தொடங்கும். மீண்டும், மீண்டும் கயவர்களை அங்கு கொண்டு உட்கார வைத்த தவறை இனியும் செய்யக் கூடாது. நான் வெறும் நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் எரியப்போகும் விளக்கு. இந்த விளக்கை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். இந்த ஊழல் காற்று எதுவும் செய்து விடாமல் உங்களது கைகளை வைத்து மறைத்து கொள்ளுங்கள்.

உள்நாட்டுகாரர்களுக்கு அதிக விலைக்கும், வெளிநாட்டுக்கு குறைந்த விலையிலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் ஒரே அரசு நமது மத்திய அரசு தான். இதை தட்டிக்கேட்கும் மாநில குரலாக தமிழகம் திகழும். அதிகாரம் என்பது மக்களுக்கு நல்லது செய்யவே.

ஓட்டுச்சாவடியில் நீங்கள் முத்திரை பார்த்து குத்தப்போகும் சத்தம் நாடெங்கிலும் கேட்கும். அதுவே எங்களது வெற்றி முரசாக இருக்கும். நாளை நமதே, நிச்சயம் நமதே என்று அவர் பேசினார்.

பின்னர், கமல்ஹாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: உங்கள் பிரசார கூட்டத்தின் போது மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது. இப்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்களே?

பதில்: அவர்கள் என்வேலையை குறைத்து விட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு வசதியாக இருக்கிறது. மற்றபடி எங்கள் அரசியல், பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலாக இருக்கும்.

கேள்வி: நீங்களும், ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வர காரணமே தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் தோற்கடிக்கவே யாரோ கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்: யாரோ கொண்டு வருகிறார்கள் என்றால் மக்கள் தான் கொண்டு வர வேண்டும். வேறு யாரும் என்னை வெளியில் இருந்து பொம்மலாட்டம் ஆட வைக்க முடியாது. நான் தலையாட்டும் பொம்மை அல்ல.

கேள்வி: தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதா?

பதில்: 3-வது அணி வாய்ப்பு உள்ளது. உடனே பெயர் சொல்ல முடியாது.

கேள்வி: மக்கள் மத்தியில் எழுச்சி எப்படி இருக்கிறது?

பதில்: மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கும் வரவேற்பு, எழுச்சி, அதை பற்றி வேண்டுமானால் பேசலாம். மற்றவர்கள் பற்றி அவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். இதுவரை எனக்கு தெரிந்து இதேபோல் எழுச்சியை பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. நான் கட்சியின் தலைவனாக, மக்களில் ஒருவனாக, பாதசாரியாக தான் பார்க்கிறேன். பாதசாரிகளின் கண்களில் நாளைய தமிழகத்திற்கான பாதையை பார்க்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது - மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் இன்னும் 2 மாதங்களில் ஏற்படப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மத்திய அரசு
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.