புயல், மழை சேதங்களுக்காக ரூ.1,200 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2021 12:00 AM GMT (Updated: 19 Jan 2021 9:50 PM GMT)

புயல் மற்றும் மழை சேதங்களுக்காக ரூ.1,200 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். நேற்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவருடைய இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 11 மணி வரையிலும் நிகழ்ந்தது.

இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தேசிய நீர் மேம்பாட்டு முகமை கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தமிழக அரசின் கருத்துக்காக அனுப்பியது. இந்த திட்டம் தமிழகத்துக்கு அவசியமானது எனக்கூறி கல்லணையுடன் நிறைவு பெறும் இந்த திட்டத்தை கட்டளை கால்வாய் தடுப்பணை வரை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தது. இதன் அடிப்படையில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து முன்னுரிமை அடிப்படையில் பணியை மேற்கொள்ள மத்திய ஜல்சக்தி துறை மந்திரிக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்த தேசிய திட்டத்தை எதிர்பார்த்து காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.255 கோடி மதிப்பில் தமிழக அரசு மாயனூரில் தடுப்பணை கட்டி உள்ளது. இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக ரூ.6,941 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள காவிரி நதியின் ஒரு பகுதியான கட்டளை கால்வாயில் இருந்து தெற்கு வெள்ளார் வரை நதியை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து முதற்கட்டமாக ரூ.331 கோடிக்கு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பணியை முன்னுரிமை அடிப்படையில் தேசிய திட்டத்தின் கீழ் அனுமதித்து அதற்கான நிதி உதவியை அனுமதிக்க வேண்டும்.

காவிரி மற்றும் அதன் துணை நதிகளை புனரமைக்க ரூ.1,632 கோடியில் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை தொடங்க மத்திய அரசின் பங்காக ரூ.713.39 கோடி நிதி உதவி கோரப்பட்டது. இந்த திட்டத்தை ‘நமாமி கங்கை' (கங்கையை சுத்தப்படுத்தும்) எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதித்து உரிய நிதியை அனுமதிக்க வேண்டும். சென்னையில் ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கான மொத்த செலவில் 50 சதவீத தொகையை மத்திய அரசின் நிதியில் இருந்து அனுமதிக்க வேண்டும்.

சென்னையில் இருந்து சேலத்துக்கு ஒரே ஒரு விமான சேவை மட்டும் இயக்கப்படுகிறது. எனவே சென்னையில் இருந்து சேலத்துக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவை இயக்க, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை அறிவுறுத்தவேண்டும். அதேபோன்று, கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை தொடங்கவும் உத்தரவிடவேண்டும்.

‘நிவர்', ‘புரெவி' புயல் மற்றும் இந்த மாதம் வழக்கத்துக்கு மாறாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான, மீட்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1,200 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ள மருத்துவ பூங்காவுக்கு ரூ.1,000 கோடியும், காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.430 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மருத்துவ கருவிகள் பூங்காவுக்கு ரூ.100 கோடியும் நிதி உதவி அளிக்குமாறு, மத்திய ரசாயன மற்றும் உர அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் குறைந்தது 2 மிகப்பெரிய ஜவுளி பூங்காக்களை அமைக்க வேண்டும்.

2021-ம் ஆண்டு பருவகாலத்துக்கான கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை ரூ.99.60-ல் இருந்து ரூ.150 ஆக கிலோவுக்கு நிர்ணயம் செய்யவேண்டும். இலங்கை அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. அதேபோல இலங்கையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களுடைய படகுகளையும் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீன்பிடி துறைமுகம் மற்றும் 18 சிறு துறைமுகங்களில் மீன் இறங்கு தளங்களை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தேசிய மீன்வள வளர்ச்சி வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைந்து ஒப்புதல் வழங்க, அதிகாரிகளை அறிவுறுத்தவேண்டும்.

தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திருச்சி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் மேம்பாட்டுக்கு உதவும், பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story