'ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தயார்' - முதலமைச்சர் பழனிசாமி


ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தயார் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 24 Jan 2021 12:11 PM GMT (Updated: 24 Jan 2021 12:11 PM GMT)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை:

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.  

அதிமுக சார்பாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு, நீட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.  

இந்நிலையில், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறுகையில், 

மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தயார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலின் தயாரா? கட்சத்தீவு பிரச்சினை குறித்து விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை மக்களுக்கு உதவுதை தடுத்த மு.க.ஸ்டாலினால் எப்படி நல்லாட்சி தர முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story