தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு செலவில் சிகிச்சை முதல்-அமைச்சர் பதவி ஏற்றதும் மு.க.ஸ்டாலின் உத்தரவு


தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு செலவில் சிகிச்சை முதல்-அமைச்சர் பதவி ஏற்றதும் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2021 8:00 PM GMT (Updated: 7 May 2021 8:00 PM GMT)

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு செலவில் சிகிச்சை பெற வகை செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.

சென்னையில் கவர்னர் மாளிகையில் கொரோனா கால நெறிமுறைகளுடன் நடந்த விழாவில், முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினும், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி என்ற வரிசையில் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கவர்னர் தேநீர் விருந்து

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.

கவர்னருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்தினர்.

பதவி ஏற்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதிகள், வெளிநாடுகளின் துணைத்தூதர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளாவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி முகமது அபுபக்கர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐபேக் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைக்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் 5 உத்தரவுகளில் கையெழுத்து போட்டார். பெண்களுக்கு அரசு சாதாரண நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட 5 உத்தரவுகளில் கையெழுத்து போட்டார்.

முதல்-அமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான ஆஸ்பத்திரி கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏற்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு மீள வழங்கும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தில் அறிவித்துள்ள 5 முத்தான அறிவிப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரசாரத்திலும் மு.க.ஸ்டாலின் சொல்லி வந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் இந்த 5 முக்கிய திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

Next Story