குழப்பம் ஏற்படுத்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் ‘‘அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை என்ற நிலையே தொடரும்’’ எடப்பாடி பழனிசாமி பேட்டி


குழப்பம் ஏற்படுத்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் ‘‘அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை என்ற நிலையே தொடரும்’’ எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2021 10:13 PM GMT (Updated: 4 Jun 2021 10:13 PM GMT)

‘‘குழப்பம் ஏற்படுத்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை என்ற நிலையே தொடரும்.’’, என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா.வளர்மதி, பெஞ்சமின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சி சார்ந்த பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டது. இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோதாவரி - காவிரி திட்டம்

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற கருத்தை தேர்தல் சுற்றுப்பயணத்தின்போதே நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்காக ஆந்திரா முதல்-அமைச்சரிடமும் வலியுறுத்தினேன். இதுகுறித்து நேரிடையாக பிரதமரை நான் சந்தித்து வலியுறுத்தினேன். தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு முழுமையான நீர் கிடைக்கவேண்டும் என்றால் இத்திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

இந்தநிலையில் இத்திட்டம் தொடர்பாக, மத்திய அரசு தேசிய நீர்வளமை முகமை விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டம். இத்திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டும் என பிரதமருக்கு, நான் கடிதமும் எழுதியிருக்கிறேன்.

பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்

கொரோனா தொற்று அதிகளவில் தமிழகத்தில் பரவி வருகின்றன. தினமும் 25 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நான் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 267 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டது. தற்போது 269 மையங்கள் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது போதாது. பரிசோதனை மையங்களையும், பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கொரோனாவுக்கு தினசரி 6,900 பேர் என்ற எண்ணிக்கையில் உச்சபட்ச பாதிப்பு இருந்தது. இன்றைக்கு அது 25 ஆயிரமாக, அதாவது கிட்டத்தட்ட 4 மடங்காக உயர்ந்திருக்கிறது. எனவே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு 24 மணி நேரத்துக்குள் அறிவிக்கப்பட்டது. தற்போது முடிவு தெரிய 3-4 நாட்கள் ஆகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் வெளியே நடமாடும்போது நோய் பரவல் அதிகரிக்கிறது. எனவே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள்ளாக தெரியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் ஆட்சியில் நாள்தோறும் வீடு வீடாக சென்று நோய் அறிகுறி கண்டறியும் பணி முன்னெடுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை என்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை

கேள்வி:- தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறதே...?

பதில்:- கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:- நிச்சயம் வருவேன், கட்சியை நல்வழிப்படுத்துவேன் என்றெல்லாம் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகியுள்ளதே...?

பதில்:- அந்த அம்மையார் (சசிகலா) அ.தி.மு.க.வில் இல்லை. மேலும் அரசியலில் இருந்தே விலகிவிட்டேன் என்று அவர் ஏற்கனவே சொல்லிவிட்டார். சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என்று கே.பி.முனுசாமி ஏற்கனவே இதை தெளிவுபடுத்தியிருக்கிறார். எனவே அவரை பற்றி பேசவேண்டியதில்லை. அவர் அ.ம.மு.க.வினருடன்தான் பேசிவருகிறார். அ.தி.மு.க.வினருடன் பேசவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்துகொண்டிருக்கிறது. சிலர் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஏற்கனவே நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர் வரை சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க.வில் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் யாருமே இல்லை. அந்த நிலைதான் தொடரும். அந்த நிலைப்பாட்டில்தான் தேர்தலை சந்தித்து இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் பனிப்போரா?

கேள்வி:- அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா யார், என்ற அறிவிப்பு எப்போது வெளியாகும்?

பதில்:- சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

கேள்வி:- இன்றைக்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லையே?

பதில்:- இன்றைக்கு அவர் வீட்டு கிரக பிரவேசம் நடக்கிறது. மேலும் இன்றைக்கு நல்ல நாள் என்பதால் கட்சி அலுவலகம் வந்தேன். நிர்வாகிகளை சந்தித்து பேசினேன்.

கேள்வி:- உங்களுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில், அரசின் மீதான விமர்சனத்துக்கு நான் பதில் அளித்து வருகிறேன். சில நேரங்களில் பொதுவான விஷயங்களுக்கு அவர் பதில் அளிக்கிறார். எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி அவதூறு பரப்புகிறார்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

நான் ஏதாவது பேசினால்?

கேள்வி:- அ.தி.மு.க. ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா... உங்களது ‘வாய்ஸ்’ அவ்வளவாக வெளியே வரவில்லையே?

பதில்:- புதிய அரசு ஆட்சிக்கு வந்தே 20 நாட்கள் தான் ஆகிறது. என்ன ‘வாய்ஸ்’ கொடுக்கிறது? இப்போ நான் ஏதாவது பேசினால், புதிய அரசு ஆட்சிக்கு வந்து சில நாட்கள் ஆகிறது. அதற்குள் பழிசுமத்துகிறார் என்பார்கள். இது கொரோனா பரவல் அதிகமாக உள்ள காலம். எனவே அனைவரும் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவதே எங்கள் நோக்கம். ஆக்கப்பூர்வான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம், எதிரி கட்சியாக அல்ல.

மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

Next Story