கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2021 7:22 PM GMT (Updated: 9 Jun 2021 7:22 PM GMT)

கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதாக செய்திகள் வருகின்றன.

ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி விலை தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 3 ஆயிரம் செங்கல் தற்போது ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.58 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது ரூ.72 ஆயிரத்துக்கும், ரூ.3 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது ரூ.5 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

செயற்கையாக விலையேற்றம்

ஊரடங்கு நடைமுறையில் உள்ளதன் காரணமாக பெரிய கட்டுமான பணிகள் முடங்கியுள்ள நிலையில் கட்டுமான பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. ஆனாலும், விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஒருவேளை, ஊரடங்கு முடிந்த பிறகு கட்டுமான பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், கட்டுமான பொருட்கள் பதுக்கப்பட்டு, அதன் காரணமாக செயற்கையாக விலையேற்றம் உருவாகி இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

விலை கட்டுக்குள் இருப்பதை...

எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, கட்டுமான பொருட்களின் அபரிமிதமான விலை ஏற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து, அதை போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் தேவைப்பட்டால் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை ஏழை-எளிய மக்களுக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story