12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை: இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்


12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை: இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்
x
தினத்தந்தி 11 Jun 2021 9:00 PM GMT (Updated: 11 Jun 2021 9:00 PM GMT)

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை: இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்பட அனைத்து உயர் கல்விக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவ-மாணவியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி

தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, தேவைப்படின் புள்ளி விவரங்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீட் தேர்வு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. இந்தநிலையில் நீட் பயிற்சியை தொடர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யவும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறும் முதல்-அமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். நீட் தேர்வு ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் உறுதியான நிலைபாடு. இதனை வலியுறுத்தி நானும் பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்

இப்போது அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை நடத்துவதன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு நினைக்கிறதோ என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்பட அனைத்து உயர் கல்விக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும், இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவ-மாணவியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story