மத்திய அரசு கொண்டுவர உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்


மத்திய அரசு கொண்டுவர உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:26 PM GMT (Updated: 22 Jun 2021 11:26 PM GMT)

மத்திய அரசு கொண்டுவர உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று புதுச்சேரி, கேரளா உள்பட 9 கடலோர மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மராட்டியம், கோவா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 கடலோர மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சிறு துறைமுகங்களை இதுவரையிலும் அந்தந்த மாநிலங்கள் நிர்வகித்து வருகின்றன. இதனை மத்திய அரசு நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. சிறு துறைமுகங்களை மாநிலங்கள் நிர்வகிப்பதில் மாற்றங்களை செய்து, மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் சட்ட முன்வடிவினை தயாரித்துள்ளது. 24-ந்தேதி (நாளை) இந்த மசோதா குறித்து விவாதிப்பதற்காக கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில், மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது இருக்கும் இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன் படி, சிறு துறைமுகங்களின் திட்டமிடல், மேம்பாடு, முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்கிறது. ஆனால் புதிய மசோதாவில் பல மாற்றங்களை செய்து மாநில அரசின் அதிகாரத்தை, இதுவரை ஆலோசனை அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வந்த கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலுக்கு மாற்றுவதாக உள்ளது. இதுதவிர மாநில அரசுகளிடம் உள்ள பல்வேறு அதிகாரங்கள், மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது.

எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்

மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசின் தற்போதைய முடிவுகள் ஒருபோதும் பயனை தராது. சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசு கொண்டுவர உள்ள மசோதா சட்டமாக்கப்பட்டால், துறைமுகங்களை நிர்வகிப்பதில் நீண்டகால பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். சிறுதுறைமுகங்களின் வளர்ச்சியிலோ, அதனை நிர்வகிப்பதிலோ மாநில அரசுகள் எந்தவிதமான பங்களிப்பும் கொடுக்க முடியாது. இதனாலேயே மத்திய அரசு அதனை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் சிறு துறைமுகங்களை நிர்வகிப்பதிலும், முறைப்படுத்துவதிலும் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ளதாக கூறி, கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து, இந்த விவகாரத்தை மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு நாங்கள் கொண்டு சென்றிருக்கிறோம். எனவே கடலோர மாநிலங்கள், சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசு கொண்டுவர உள்ள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றும், மாநிலங்களிடம் உள்ள அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளை தடுப்பதற்காக கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரங்கள் பற்றி நம்முடைய அனைத்து மாநிலங்களும் கலந்து பேசி, 24-ந்தேதி நடைபெற உள்ள கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story