மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை


மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 24 Jun 2021 11:45 PM GMT (Updated: 24 Jun 2021 11:45 PM GMT)

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த 21-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் நேற்று முடிவடைந்த நிலையில், நேற்று மாலையே அமைச்சரவையை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 6.15 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள்

சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தொழில் தொடங்க முன்வரும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல், அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரம் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதிநிலை தொடர்பாக வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை தயாரிப்பு குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. இரவு 7.05 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் சென்றிருந்தனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 2-வது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story