தமிழக அரசு மேல் முறையீட்டு வழக்கை திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்


தமிழக அரசு மேல் முறையீட்டு வழக்கை திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்
x
தினத்தந்தி 3 July 2021 12:27 AM GMT (Updated: 3 July 2021 12:27 AM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இழைக்கப்படும் மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

இந்த தீர்ப்பு தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். மேல் முறையீட்டுக்காக தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவையாகும். எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து 
ஐகோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story