மாநில செய்திகள்

ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + MK Stalin announces formation of Adi Dravidar-Tribal Welfare Commission

ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
சென்னை,

தி.மு.க. ஆட்சி எப்போது அமைகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகிற அரசாக விளங்கியிருக்கிறது. சமூகத்தில் சதிகளாலும், சாதிகளாலும் புறக்கணிப்பட்டவர்களை அன்புக்கரம் கொண்டு அரவணைத்து, அவர்கள் தங்களிடம் தேங்கிக்கிடக்கும் திறமைகளையும், அவர்களால் சமூகம் பெறத்தக்க பங்களிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதில் அதிக அக்கறையை எப்போதும் காட்டி வரும் கொள்கைப் பிடிப்பைக் கொண்ட இயக்கம்தான் தி.மு.க. பேரறிஞர் அண்ணா ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று சொல்லியதை இதயத்தில் ஏற்றி, ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து எங்கிருந்து வந்தாலும் அதை வரவேற்றுச் செயல்படுத்தி, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் நம்முடைய நோக்கம்.


மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்க சட்டம் இயற்றும். அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்த சட்டமன்ற தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.

4 புதிய நீதிமன்றங்கள்

ஆதி திராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளைப் பொது நீரோட்டத்திற்கு கொண்டுவர வேண்டுமென்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. முதற்கட்டமாக, அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினி பயிற்சி போன்றவை பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும்.

ஆனால், பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்ந்து ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கைவசமே இருக்கும். பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிா்வாக பணிகளைக் கையாளுதல் போன்றவற்றை அத்துறையே செயல்படுத்தும். பள்ளி கல்வித்துறை அவற்றில் தலையிடாது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்கு தற்சமயம் தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தைத் தொடர்ந்து இன்னும் 4 புதிய நீதிமன்றங்களை சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், இந்த 4 மாவட்டங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

நிதி உதவி அதிகரிப்பு

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாய கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவற்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் ‘சமத்துவம் காண்போம்’ என்கிற தலைப்பில் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்.

இலக்கு

விழிப்புணர்வு கூட்டமே தேவையில்லை என்கிற நிலையை அடைவதே நம் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் மனதில் மடைமாற்றத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கேற்ப ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற ஒப்பற்ற தத்துவத்தின்படி இணைந்து வாழ அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவா் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
2. அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க.வின் பொன் விழாவையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
3. தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. ‘இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்’ மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைக்க வேண்டும்
இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி மலரும். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
5. விக்ரம் வேதா ரீமேக் படத்தின் புதிய அறிவிப்பு
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.