பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை நடத்த பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Sep 2021 8:29 AM GMT (Updated: 28 Sep 2021 8:29 AM GMT)

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளப்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை ஐகோட்டில் தொடரப்பட்ட வழக்கில்,  சட்டத்துக்கு உட்பட்டு கிளப் நடத்தப்படுகிறது என்றும்,  ஆனால், காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தங்களைத் துன்புறுத்துவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இந்த கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் சட்டவிரோதமாகப் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கிளப்கள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.யைச் சேர்த்த நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, அதில் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா என்று ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த கிளப்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக 12 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.  

Next Story