நீலகிரி கலெக்டரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்


நீலகிரி கலெக்டரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Nov 2021 10:11 PM GMT (Updated: 22 Nov 2021 10:11 PM GMT)

நீலகிரி கலெக்டரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில், யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து, அவற்றை பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் நலனை புறந்தள்ளி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியல் அழுத்தம் கொடுத்து நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு அரசின் பொறுப்பற்றச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

நீலகிரி மாவட்டத்தில் தீர்வுகாண முடியாத பெரும் சிக்கலாக இருக்கிற யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி எடுத்தார். அப்பணிகளில் எவ்விதத்தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முழுமையாக யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்கும் வரை நீலகிரி மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டது.

இந்த நிலையில், யானைகளின் வழித்தடங்கள் முழுமையாக மீட்டெடுக்கப்படாதச்சூழலில், மாவட்ட கலெக்டர் சொந்தக்காரணங்களுக்காக இடமாற்றம் கோருவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க. அரசு முயல்கிறது.

சூழலியல் மீது பெரும் அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட கலெக்டரை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மறைமுக அரசியல் அழுத்தம் கொடுத்து இடமாற்றும் முடிவை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story