மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு + "||" + Relaxation curfew in Tamil Nadu: Corona infection control extended till 15th

தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவியதை தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதியன்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் அளவையடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. என்றாலும், ஊரடங்கு உத்தரவு இந்நாள் வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.


கடந்த மே மாதத்தில் தினசரி தொற்றின் அளவு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 720 (நேற்றைய நிலவரம்) என்ற அளவிற்கு குறைந்து வந்துள்ளது. எனவே கட்டுப்பாடுகளிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, 30-ந்தேதியுடன் (நேற்று) முடிவடைந்துவிட்டது.

15-ந்தேதி வரை நீட்டிப்பு

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணைப்படி 30.11.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 30.11.2021 நாளிட்ட கடிதத்தில், கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

கேரளாவுக்கு பொது போக்குவரத்து

ஏற்கனவே ஆந்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது, அதைப்போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகள்

நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகள்

வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், சில நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதன்படி, அந்த பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர மற்றசெயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மக்களுக்கு வேண்டுகோள்

கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும்கூட, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் வேண்டும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடங்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம்-குடியிருப்பு கட்டிடங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.26.66 கோடியில் கட்டப்பட்ட கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
3. பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியுஷ் கோயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4. ஈரோட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை ரூ.3.40 கோடியில் விரிவாக்கம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையையும், ஓசூரில் புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5. டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம்பெறும்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.