இந்தியாவிற்கே ரோல்மாடலாக தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார் - அமைச்சர் சேகர்பாபு


இந்தியாவிற்கே ரோல்மாடலாக தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார் - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 22 Jan 2022 12:53 PM GMT (Updated: 2022-01-22T18:23:44+05:30)

இந்தியாவிற்கே ரோல்மாடல் முதல் அமைச்சராக நமது தமிழக முதல் அமைச்சர் திகழ்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

ராயபுரம், 

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வடசென்னையில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கு பாடுபட்ட திமுக கழக நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் தா. இளைய அருணா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்துகொண்டு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.கழக நிர்வாகிகளுக்கு கைக்கடிகாரம், வேட்டி, சட்டை, புடவை தொகுப்புகள் அடங்கிய பரிசுகளை வழங்கினார்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் சேகர்பாபு, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழக கூட்டணி மிகப் பெருமையுடன் வெற்றி பெற்றதற்கு தி.மு.க தலைவர் அவர்களின் அயராத உழைப்பும் அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே காரணம். அந்த வெற்றிக்காக களத்தில் நின்று பாடுபட்ட திமுக நிர்வாகிகளின் உழைப்பு என்றும் மதிக்கதக்கது. பாராட்டப்பட வேண்டியதுமாகும். அந்த வகையில் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளுக்கு இங்கு பரிசு வழங்கி இருப்பது மிகவும் பெருமைபடக்கூடிய செயலாகும்.

அரசியல் அரங்கில் பலர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தங்களது நிலையை மாற்றிக்கொள்வார்கள். தங்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் வந்து விட்டது போல எண்ணுவார்கள். ஆனால் நமது தமிழக முதல்வர் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும்கூட மக்களிடம் நெருங்கி பழக கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளார் .

அதேபோல் திட்டங்களை நிறைவேற்றுவதில் வலிமை மிக்கவராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் தனது அயராத உழைப்பால் தி.மு.கழக தொண்டர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் இந்து சமய அறநிலையத் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

1927ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது இந்து சமய அறநிலையத்துறை துவக்க பட்டிருந்தாலும், 1959 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறைக்கு என தனி சட்டம் வகுக்கப்பட்டு, அதன்படி செயல்பட துவங்கி இருந்தாலும், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்து சமய அறநிலையத்துறையின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களே நேரில் வந்து பங்கேற்று, சுமார் ஒன்றரை மணி நேரம் அக்கூட்டத்தில் பங்கேற்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து மேலும் அதற்கான விளக்கங்களையும் எடுத்துரைத்தார் .

மேலும் அங்கு பங்கேற்ற அனைவரிடமும் நீங்கள் அறநிலையத் துறை வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். தமிழக முதல்வர் அவர்களின் இத்தகைய சீர்மிகு செயல்பாடுகள் மூலம் இந்துசமய அறநிலையத்துறையில் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். 

அதுமட்டுமில்லாமல் தமிழக முதல்வர் அவர்கள் என்றென்றும் நம் நினைவில் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், சிந்தாமல் சிதறாமல் கட்டிக் காத்து வருகிறார். தமிழக முதல்வர் அவர்களின் உழைப்பையும் நிர்வாகத் திறமையையும், ஆன்மீகவாதிகளும் புகழ்கிறார்கள், அண்டை மாநில முதல்வர்களும் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுகிறார்கள். இத்தகைய பாராட்டுகளின் மூலம் இந்தியாவிற்கே ரோல்மாடல் முதல்வராக நமது தமிழக முதல்வர் திகழ்கிறார் என்பது நாமெல்லாம் பெருமைகொள்ள வேண்டியவையாகும். 

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்.எல்.ஏக்கள் ஐடிரீம்.மூர்த்தி ஜே.ஜே.எபிநேசர் உட்பட பல தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story