ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை


ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Jan 2022 5:22 PM GMT (Updated: 27 Jan 2022 5:22 PM GMT)

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டி இருப்பதாக தனிநபர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீர்நிலை ஆக்கமிரப்பு வீடுகளை அகற்றும்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த வருடம் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பொதுமக்கள் நோட்டீசை வாங்க மறுத்ததுடன், தங்களுக்கு இதே இடத்தில் வசிக்க பட்டா வழங்க வேண்டும் என கூறி பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தினமான நேற்று அரசு விடுமுறை நாளிலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதிக்கு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் காலம் காலமாக அங்கு வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்' என்று கூறியுள்ளார்.

Next Story