கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுத்த தொழிலாளி மனைவி அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளை வளர்க்க அரசு உதவ வேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுபலட்சுமி (வயது 21). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த சுபலட்சுமி பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி அரசு மருவத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி சுபலட்சுமிக்கு சுக பிரசவத்தில் அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுத்தால், அந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன்படி 3 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஏழ்மையான குடும்பம்
இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பெண் குழந்தைகளும் சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றினர். தற்போது தாயும், 3 பெண் குழந்தைகளும் நலமாக உள்ளனர். இது குறித்து குழந்தையின் தாய் சுபலட்சுமி கூறுகையில், எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு நல்ல முறையில் டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். 3 பெண் குழந்தைகளும் நலமுடன் உள்ளது. எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக உள்ளது. எனவே பெண் குழந்தைகளை வளர்க்க அரசு உதவி செய்யவேண்டும் என்றார்.