கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

க.பரமத்தி அருகே சமூக ஆர்வலரை வேனை ஏற்றி கொலை செய்த வழக்கில் கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூர்

சமூக ஆர்வலர் கொலை

கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் க. பரமத்தி அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்தது. கல்குவாரிக்கு அருகாமையில் காளிபாளையம் வெட்டுக்காட்டுத்தோட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது.இந்தநிலையில் செல்வகுமாருக்கும், ஜெகநாதனுக்கும் கல்குவாரி சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து செல்வகுமார் தனது கூட்டாளிகளான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஜெகநாதன் மீது வேனை ஏற்றி கொலை செய்தனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து செல்வக்குமார், ரஞ்சித்குமார், சக்திவேல் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் பிரபுசங்கர் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து கடந்த 10-ந்தேதி செல்வக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று சக்திவேல், ரஞ்சித்குமார் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story