வீட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்


வீட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
x

மதுரையில் போலீசாரின் திடீர் சோதனையில் வீ்ட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில் போலீசாரின் திடீர் சோதனையில் வீ்ட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற பெண்

மதுரையில் கஞ்சா விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அண்ணாநகர் போலீசார் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் வண்டியூர் சவுராஷ்டிராபுரம் 12-வது தெரு உள்ள அந்த வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். மேலும் அங்கு முனியசாமியின் மனைவி முத்துக்காளி(வயது 42), கோவிந்தன்(38) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

மேலும் வீட்டை சோதனை செய்தபோது அங்கு 50 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய், செல்போன்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் 53 கிலோ பறிமுதல்

மதுரை திடீர்நகர் இன்ஸ்பெக்டர் காசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹீராநகர் ெரயில்வே தண்டவாளம் அருகே சென்ற போது அங்கிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் பேரையூர் எழுமலையை சேர்ந்த சிவன்பாண்டியன்(35), நேதாஜி ரோடு சதீஷ்குமார்(24), வாடிப்பட்டி குருவித்துறை அருண்குமார்(25), புதுப்பட்டி அபினேஷ் (21) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி பூங்கா அருகில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற நரிக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார்(24), வில்லாபுரம், மீனாட்சி நகர், முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த சிவகுமார்(23), மீனாம்பிகைநகர் கண்ணன்(23), ஜெய்ஹிந்த்புரம் பிள்ளையார்கோவில் தெரு வெங்கடேசன்(27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கீரைத்துறை போலீசார், தனுஷ்கோடி என்பவரை ைகது செய்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக பெண் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 53 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நடப்பாண்டில் 248 பேர் கைது

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறும் போது, மதுரை நகரில் கஞ்சா, புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 274 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 248 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகம் சீல் வைக்கப்பட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மதுரை நகரில் கஞ்சா விற்ற 68 பேரிடம் சுமார் ரூ.67 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 வழக்குகளில் அசையா சொத்துக்களை முடக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.


Next Story