பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி
பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
சுற்றுலா சென்றனர்
சென்னை கோடம்பாக்கம் 2-வது தெரு ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் ஹபீப் (வயது 40). இவர், தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மதியம் தனது காரில் பள்ளி நண்பர்களான சென்னை பாரிஸ் ஆண்டர்சன் தெருவை சேர்ந்த சிக்கந்தர்(40), கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஹிப் (40) ஆகியோரை அழைத்து கொண்டு புறப்பட்டார். ஹபீப் காரை ஓட்டினார்.
மாலை 5.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது. அப்போது வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார். அப்போது கார் சாலையை விட்டு இறங்கி, முன்னால் சாலையோரமாக பழுதாக நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
சாவு
இதில் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஹபீப், சிக்கந்தர், ஷாஹிப் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்த சிக்கந்தர் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் தொழில் செய்து வந்தார். படுகாயமடைந்த ஹபீப் வீட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் விற்கும் தொழில் செய்து வருகிறார். ஷாஹிப் துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.