நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது..!


நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது..!
x
தினத்தந்தி 7 Jan 2024 10:12 AM GMT (Updated: 7 Jan 2024 10:43 AM GMT)

பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று பந்தலூர் அருகே உள்ள தொண்டியாளம் பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையின் ஒரு குழு ஈடுபட்டது. அப்போது திடீரென எங்கிருந்தோ பெண்களின் அலறல் சத்தம் கேட்டது. உடனே சத்தம் வந்த திசைக்கு வனத்துறையினர் ஓடினர்.

அப்போது அங்கிருந்த பெண்கள், தேயிலை செடிகளுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியை கவ்வி இழுத்து சென்று விட்டதாக கூறினர். உடனே வனத்துறையினர் தேயிலை செடிகளை விலக்கி தேடியபோது அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவளை தோளில் தூக்கிக்கொண்டு, பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் பந்தலூர் பஜார், தேவாலா பஜார், மேங்கோரேஞ்ச் பிரிவு ஆகிய 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தையை சுட்டு பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், காட்டுக்குள் சுற்றி கொண்டிருந்த சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், புதர் ஒன்றில் மயங்கிய நிலையில் இருந்த சிறுத்தையை வனத்துறையினர் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர். சிறுத்தையின் உடல் நலம் குறித்து சோதனை செய்த பின்னரே வனப்பகுதியில் அல்லது வேறு எந்த பகுதியில் விடப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதியில் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story