ஆவடி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஆவடி அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 35). இவர், காவாங்கரை பகுதியில் உள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டமாகும்.
நேற்று முன்தினம் மாலை சண்முகநாதன், வேலை சம்பந்தமாக ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் ஆவடி அடுத்த வீராபுரம் அருகே சென்றபோது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த சண்முகநாதன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சண்முகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பழுதாகி நின்ற லாரிக்கு பின்னால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எவ்வித தடுப்புகளும் அமைக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த முருகன் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் மதுரவாயல், பல்லவன் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் இளவரசன் (40). இவர், தனியார் ஆன்லைன் செயலி மூலம் மோட்டார் சைக்கிள்(பைக் டாக்சி) ஓட்டும் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர் ஒருவரின் அழைப்பின்பேரில் அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்துச்செல்வதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த இளவரசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.