அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு
ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.
சென்னை
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் தொடர்ந்து நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர், மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது.அ.தி.மு.க.வில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி காலாவதியாகவில்லை.
எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன,ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடும் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை.காலி இடத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. தலைமை இடத்தை பிடிக்க முயன்றனர் என வாதிடப்பட்டது.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது.பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது.
முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் 2 நாட்களாக கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இருதரப்பு ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டார்.