நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் -எடப்பாடி பழனிசாமி தகவல்


நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் -எடப்பாடி பழனிசாமி தகவல்
x

நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவற்றில் 27 சதவீத அறிவிப்புகள்தான் நிறைவேற்றப்பட்டதாக அவையில் நிதித்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மொத்தமாக 2011-21-ம் ஆண்டுகளில் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், அதில் 1,167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாகவும், நடைபெற்று வருகிற பணிகள் 491 என்றும் ஆணை வெளியிட வேண்டியவை 20 பணிகள், பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவை 26 பணிகள் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

1,704 அறிவிப்புகளில் 1,167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என்றால் 68 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அர்த்தம். ஆனால் இந்த உண்மையை மறைத்து அ.தி.மு.க. ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று வேண்டுமென்று திட்டமிட்டு சொல்லுகிறார்கள்.

அட்சயப் பாத்திரம் திட்டம்

அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் அட்சயப் பாத்திரம் என்ற திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு மாநகராட்சி பள்ளிக்குழந்தைகள் 35 ஆயிரம் பேருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. முதலில் அந்த திட்டத்தை தொடக்கி வைத்தது அ.தி.மு.க. அரசு. இதுபற்றி அவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம்தான் காலை சிற்றுண்டி திட்டம்.

அட்சய பாத்திரம் திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் கண்ணுக்கு தெரியாமல் போய் இருக்கிறது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. கவர்னர் பற்றி விமர்சனம் செய்யவே கூடாது. நீங்கள் கேட்பதால் சொல்ல வேண்டியதுள்ளது. கவர்னருக்கு சில விருப்புரிமை அதிகாரங்கள் உள்ளன. அந்த வகையிலே குறிப்பிட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளன. எல்லா அரசிலும் அது அனுப்பப்பட்டுள்ளது.

அதை உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டுகூட இதே அரசு ரூ.5 கோடி கொடுத்திருக்கிறது. நலத் திட்டத்திற்குத்தான் கவர்னர் கொடுத்திருக்கிறார். வேறு எந்த திட்டத்திலும் கொடுக்கவில்லை. ஏழை எளிய குழந்தைகள் பள்ளிக்கு அதிகமாக வரவேண்டும், அவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த நிதி வழங்கப்பட்டது.

போதையால் கொலை

சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதுபற்றி தெரிவித்தால் மறுத்து பேசுகிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பு பெரம்பூர் தெற்குப்பகுதி கழக செயலாளர் இளங்கோவன், கஞ்சா போதையில் இருந்த 5 பேரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அதைப்பற்றி சொன்னால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போதை காரணமாகத்தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சரின் படம் போட்ட பனியனுடன் தி.மு.க.வினர் 2 பேர் போதையில் ஒரு கடையிலே ரகளை செய்தார்கள். அவர்களை முகமது இப்ராகிம் என்பவர் சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அவரை போதை ஆசாமிகளான ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய சகோதரர்கள் கொலை செய்து விட்டனர். கஞ்சா போதையில் இது நடந்தேறியது. தமிழகத்தில் கஞ்சா தாராளமாக புழக்கத்திலே இருக்கிறது.

டி.ஜி.பி. அறிவித்த கஞ்சா ஆபரேசன் 2.0, அறிவிப்போடு போய்விட்டது. கஞ்சாவை முழுமையாக தடை செய்திருந்தால் இப்படிப்பட்ட கொலை சம்பவங்கள் நடந்தேறி இருக்காது. மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டணி

அம்மா உணவகத்தில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார். அதற்கு ஆதாரம் கேட்கிறார்கள். எந்த ஆதாரத்தை திரட்ட முடியும். சமையல் செய்கிறார்கள், அதனை ஏழை எளியவர்களுக்கு மலிவு விலையில் கொடுக்கிறார்கள். இதில் என்ன ஆதாரத்தை கொடுக்க முடியும்.

அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகத்தில் சுவையாக உணவு கொடுக்கப்பட்டது. இப்போது அங்கு பணிபுரியும் ஆட்களை குறைத்து விட்டார்கள், தரம் இல்லாத பொருட்களை கொடுப்பதால் ருசி இல்லாத உணவு வழங்கப்படுகிறது. இதை எடுத்துச் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் சென்று சாப்பிட்டு பாருங்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா சொல்லி இருக்கிறார். கூட்டணி இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே. ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றுதான் சொல்லுகிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி வைத்திருந்தோம். நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணியுடன்தான் பயணம் செய்கிறோம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

காவல்துறை முழு சுதந்திரமாக செயல்படுகிறது, சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் பல மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக நீங்கள் கேட்டால், சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே அ.தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளர்.

விழுப்புரத்தில் 2 பேர் கஞ்சா போதையில் கடையில் தகராறு செய்து கொண்டிருக்கும்போது அதை தடுத்து நிறுத்த நினைத்தவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கிறது. இதில் அரசு முழுகவனம் கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் ஆகும். இன்றைக்கு போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் விளங்குவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து ஏற்கனவே சபாநாயகரிடம் தெரிவித்திருந்தோம். அவர் இன்னும் பதில் சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story