அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு


அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு
x

விராலிமலையில் அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

அ.தி.மு.க. மாநாடு மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து மதுரை செல்லும் தொடர் ஜோதி ஓட்டத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந் தேதி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் 70 பேர் கொண்ட குழு ஜோதியுடன் புறப்பட்டனர். இந்தநிலையில் தொடர் ஜோதி ஓட்ட குழுவினரை நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி (மேற்கு), நாகராஜன் (தெற்கு) ஆகியோர் தலைமையில் வரவேற்றனர். பின்னர் தொடர் ஜோதி ஓட்டமானது விராலிமலை முருகன் கோவிலை சுற்றி வந்து அம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கினர். அதன் பிறகு இன்று (சனிக்கிழமை) காலை ஜோதி புறப்பட்டு நாளை காலை மதுரையில் நடக்கும் மாநாடு திடலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்குகின்றனர்.

இதேபோல் அ.தி.மு.க. மாநாடு பிரசார வாகனம் நேற்று திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வந்தது. புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே அந்த வாகனத்தை அ.தி.மு.க.வினர் வரவேற்றனர். தொடர்ந்து நகர செயலாளர் சேட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதி, திருவப்பூர், மச்சுவாடி உள்ளிட்ட இடங்களில் சுற்றி வந்தது. அதன்பின் சிவகங்கை புறப்பட்டு சென்றது. தொடர்ந்து நாளை அந்த வாகனம் மதுரை சென்றடைகிறது.


Next Story