ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண்/ பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக (ரெடிமேட்) உற்பத்தி அலகு ஏற்படுத்தும் திட்டம் 2022-23-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 16-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.