பஸ்சில், பிடித்த பாடலை வைக்காததால் டிரைவர்-கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்


பஸ்சில், பிடித்த பாடலை வைக்காததால் டிரைவர்-கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்
x

அஜித்.

நாகை அருகே பஸ்சில் பிடித்த பாடலை வைக்காததால் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

நாகை அருகே பஸ்சில் பிடித்த பாடலை வைக்காததால் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பஸ்சில் ஒலித்த பாடல்

நாகை அருகே அகலங்கன் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாரதி (வயது 25). மினி பஸ் டிரைவர். நேற்று இவர் நாகையில் இருந்து ஆய்மழை கிராமத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார்.

நாகை கோட்டைவாசல்படி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றது. அப்போது நாகை அருகே உள்ள அகரஒரத்தூர் காலனி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் அஜித்(27), சிக்கல் பொன்வெளி பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேரும் பஸ்சில் ஏறினர்.

பிடித்த பாடலை வைக்காததால் ஆத்திரம்

பஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் இவர்கள் பஸ்சில் ஒலித்த பாடலை மாற்றி தங்களுக்கு பிடித்த பாடலை வைக்குமாறு டிரைவரிடம் கூறினர். அப்போது டிரைவர், வேறு பாடலை மாற்றுவதற்கு ரேடியோவில் வசதி இல்லை என்று கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து அஜித், ராஜேஷ் ஆகிய இருவரும் சிக்கல் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். இந்த நிலையில் ஆய்மழை கிராமத்துக்கு சென்ற மினி பஸ் மீண்டும் நாகைக்கு வந்து கொண்டிருந்தது.

டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்

சிக்கல் ரெயில்வே கேட் அருகே அந்த பஸ் வந்தபோது அஜித், ராஜேஷ் மற்றும் பொன்வெளியை சேர்ந்த அரவிந்தன், அக்கரைப்பேட்டையை சேர்ந்த கதிர்வேல் ஆகிய 4 பேரும் சேர்ந்த பஸ்சை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் வேறு பாடல் வைக்காத ஆத்திரத்தில் பஸ் டிரைவர் பாரதி மற்றும் கண்டக்டர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கியதுடன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

கைது

இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பாரதி, நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள ராஜேஷ், அரவிந்தன், கதிர்வேல் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story