ரூ.9½ கோடி மோசடி - 2 பேர் கைது


ரூ.9½ கோடி மோசடி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2023 7:44 PM GMT (Updated: 18 Jun 2023 7:40 AM GMT)

நிலம் விற்பனை தொடர்பாக ரூ.9½ கோடி மோசடி செய்த 2 பேர் கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலம்

அன்னதானப்பட்டி

சேலத்தில் நிலம் விற்பனை தொடர்பாக ரூ.9½ கோடி மோசடி செய்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நிலம் விற்பனை

சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 44). நிதி நிறுவன அதிபர். இவருக்கு கொண்டலாம்பட்டி அடுத்த நெய்க்காரப்பட்டியில் 3¼ ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதற்காக சேலம், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களிடம் அவர் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரிடம் தினேஷ்குமார் நிலம் விற்பனை செய்ய பேசி முடித்ததாக கூறப்படுகிறது. நிலத்தை பதிவு செய்ய வீரபாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து, முன் பணம் ரூ.33 லட்சத்தை இளங்கோவன் தரப்பினர் தினேஷ்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ.9 கோடியே 67 லட்சத்தை பத்திரப்பதிவு முடிந்த பின்பு கொடுப்பதாக கூறி விட்டு அவர்கள் அங்கிருந்து காரில் சென்று விட்டனர்.

போலீசில் புகார்

இதனிடையே சில நாட்கள் கழித்து அந்த நபர்கள் தங்களது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த மோசடி குறித்து தினேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில், உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று காலை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் காரில் வந்த நபர்களை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அரூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (43), சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

மேலும் இவர்கள் 2 பேரும் தினேஷ்குமாரிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வேறு நபர்களிடம் இதேபோல மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story