நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு


நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:45 PM GMT)

கடமலை-மயிலை ஒன்றியத்தில் நீர்நிலைகள் வறண்டதால் கால் நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி

நீர்நிலைகள் வறண்டன

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆடு, மலை மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கால்நடைகளை அந்தந்த கிராமங்களில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மலைகளில் உள்ள சிறு, சிறு குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து வந்தன.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாததால் மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டன. இதனால் கால்நடைகள் மலைகளுக்கு அருகே உள்ள கண்மாய், குளம் மற்றும் மூலவைகை ஆறுகளில் நீர் பருகி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக கடந்த வாரம் மூலவைகை ஆறு வறண்டது. மேலும் குளம், கண்மாய்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் மலைப்பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்கள் வறண்டதால் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்படும் கால்நடைகளை தண்ணீருக்காக 2 முறை மலைகளில் இருந்து நீர் இருக்கும் இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக கால்நடைகள் போதிய அளவில் இரை உண்ணுவதில்லை. இதனால் கால்நடைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story