கம்பம் அருகே உத்தமுத்து கால்வாய் கரைகள் சீரமைக்கப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு


கம்பம் அருகே உத்தமுத்து கால்வாய் கரைகள் சீரமைக்கப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 9:00 PM GMT (Updated: 17 Jun 2023 9:00 PM GMT)

கம்பம் அருகே உத்தமுத்து கால்வாய் கரைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நிலங்களும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பளவில் ஒரு போக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முல்லைப்பெரியாறு ஆற்றில் செல்கிறது.

இந்த ஆற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைத்தும், மதகுகள் அமைத்தும் கால்வாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. அதன்படி, கம்பம் அருகே தொட்டன்மன்துறை தடுப்பணையில் இருந்து உத்தமுத்து கால்வாய் மூலம் கம்பம் வடக்கு பகுதி, அண்ணாபுரம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்தநிலையில் உத்தமுத்து கால்வாயின் இருகரைகளும் பல ஆண்டுகளாக பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்களை கரை வழியாக வாகனங்களில் கொண்டு செல்ல சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கரைகள் உடைந்து கால்வாய் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வீணாக செல்லும் நிலை உள்ளது. எனவே உத்தமுத்து கால்வாய் கரைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story