மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x

விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசா ரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பாலியல் தொல்லை

பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகளில், சிலரிடம் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வரப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தர்மராஜன், சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் கல்யாணி தலைமை தாங்கினார். தலைவர் அமுதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சம்மேளனத்தின் மாநில செயலாளர் கண்ணகி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால், தற்போதைய மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தர்மராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இனியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தையும், மாவட்ட போலீஸ் அலுவலகத்தையும் விரைவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சம்மேளனத்தினர் தெரிவித்தனர்.


Next Story