திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்


திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
x

திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடந்த 17-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தில் 3-வது மழைப்பொழிவாகும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுவிட்டது. இருப்பினும், தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இந்த 3-வது மழைப்பொழிவில் பெய்யவில்லை. இந்த தாழ்வு மண்டலம் பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.

வலுவிழக்கிறது

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வுப்பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

4 மாவட்டங்களில் கனமழை

தென்மேற்கு வங்க கடலில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 8.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு - வடகிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது. இது மேற்கு - வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழக - புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (புதன்கிழமை) முதல் 25-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை...

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தரைக்காற்று சில நேரங்களில் மணிக்கு 20 முதல் 25 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 30 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆந்திர கடலோர பகுதிகள், தமிழக - புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story