''கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல்''


கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல்
x

கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல் நடைபெறுவதாக ஆலங்குடியில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ''என் மண், என் மக்கள்'' எனும் முழக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று அவர் பாதயாத்திரை சென்றார். அரிமளம் விலக்கு சாலையில் இருந்து காலை 9.45 மணிக்கு நடக்க தொடங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நடந்து வந்தனர். சாலையில் இருபுறமும், ஆங்காங்கே நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தும், இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தபடியும் அவர் நடந்து வந்தார்.

அவருக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். கடைவீதி, ஆலங்குடி அரசு மருத்துவமனை வழியாக காமராஜர் சிலை அருகே வந்தடைந்தார். அங்கு யாத்திரை வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிவிட்டது. மத்திய அரசில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகி விட்டது. இந்த 2 ஆட்சிகளின் பட்டியலை மக்கள் தராசு வைத்து பார்க்கின்றனர்.

தாய், தந்தையை இழந்த சிறுவர்கள்

ஆலங்குடியில் தி.மு.க.வினரின் அராஜகத்தால் 2 சிறுவர்கள் தாய், தந்தையை இழந்து நிற்கின்றனர். (அப்போது அந்த வேனில் 2 சிறுவர்களும் நின்றனர்). தி.மு.க.வின் ஆட்சி என்பது தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பது. இதுதான் திராவிட மாடலின் ஆட்சி.

இந்த சிறுவர்களின் தாய் கோகிலா இறக்கும் போது தி.மு.க.வினரின் அராஜகம் பற்றி கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இதில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனரா? உண்மையிலேயே நீதி கிடைத்துள்ளதா? என்றால் இல்லை. இந்த ஆட்சியை பொறுத்தவரை கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என்பது தான் முகவரி அடையாளம்.

காவிரி-குண்டாறு திட்டம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை சரிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமலே மாநில அரசு வண்டியை ஓட்டிக்கொண்டுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தால் நம்மால் நிரந்தரமான தீா்வு கொண்டுவர முடியும்.

மத்திய அரசின் திட்டங்களில் லஞ்சம், கமிஷன் இருக்கக்கூடாது என்பதற்காக மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்குகளில் நிதி கொடுக்கப்படுகிறது.

கடைசி இடத்தில் சுற்றுச்சூழல் துறை

இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சராக உள்ளார். இந்த துறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியாவின் 29 மாநிலங்களில் தமிழகம் 21-வது இடத்தில் உள்ளது. ஆறுகளில் தண்ணீர் எடுத்து குடிக்கக்கூடிய வகையில் உள்ள மாநிலங்களில் கடைசியில் இருந்து 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆறுகளில் தண்ணீர் எடுத்து குடிக்க முடியாத வகையில் மாசு படிந்துள்ளது. இந்தியாவில் மோசமான கடல் அரிப்பு மாநிலத்தில் தமிழகம் "நம்பர் ஒன்" மாநிலமாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் உலகத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படும் 50 இடங்களுக்குள் தமிழகம் இருக்கிறது.

இதுதான் இந்த துறை அமைச்சரின் சாதனை. இந்தியாவில் கடைசி இடத்தில் அமைச்சர் மெய்யநாதன் துறை உள்ளது. அமைச்சர்கள் `நீட்' தேர்வு வேண்டாம் என்று கூறுகின்றனர். ஆனால் `நீட்' தேர்வில் ஒருபுறம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து கொண்டிருக்கின்றனர். கீரமங்கலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 3 ஆண்டுகளில் 12 பேரும், இந்த ஆண்டு 3 பேரும் மருத்துவம் படிக்க சென்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் மற்றொரு அமைச்சரான ரகுபதி சிறையில் இருக்க வேண்டியவர். அவருக்கு சிறைத்துறை அமைச்சர் பொறுப்பை கொடுத்துள்ளனர்.

ஈழப்பிரச்சினை

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்ததில் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி வந்த பின் இன்று இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் அமைதி முற்றிலுமாக திரும்பியிருக்கிறது. இலங்கையில் வடகிழக்கு பகுதியில் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு மத்திய அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈழப்பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். வேறு யாராலும் தீர்வு கொடுக்க முடியாது. மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் இன்று விவசாயிகளாக மதிக்கப்படுகின்றனர். பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி, பயிர் காப்பீடு திட்டம், 80 சதவீத மானியத்தில் உரங்கள் விற்பனை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உரக்கடைகளில் மண்ணின் தன்மையை சோதிக்கக்கூடிய கருவிகள் வர உள்ளது.

கால்வாயை சுத்தப்படுத்த...

விவசாயிகளின் உற்ற தோழனாக இருக்கக்கூடியவர் பிரதமர் மோடி. அவர் பிரதமராக வந்த பின் விவசாயிகள் தற்கொலை என்பது இல்லை. 2014-ம் ஆண்டிற்கு முன்பு வறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்பது இருந்தது. விவசாயிகள் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் வசதி கொடுக்கப்பட வேண்டும். கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு நிதி கொடுக்கிறது. அதிலும் இவர்கள் லஞ்சம், ஊழல் செய்கின்றனர். அதனையும் சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், ஆலங்குடி அடல் அறக்கட்டளை நிறுவனர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குடியில் அண்ணாமலை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை சென்றார். தென்னை விவசாயிகள் அவரிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். ஆலங்குடியை தொடர்ந்து அவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பாதயாத்திரைக்காக புறப்பட்டு சென்றார்.

அண்ணாமலைக்கு தக்காளி மாலை

பாதயாத்திரையின் போது இஸ்லாமிய தொண்டர் ஒருவர் மெக்கா, மதீனா புகைப்படத்தை நினைவு பரிசாக அண்ணாமலைக்கு வழங்கினார்.

அண்ணாமலைக்கு தக்காளி மாலையை தொண்டர் ஒருவர் அணிவிக்க முயன்றார். அதனை கையில் வாங்கி கொண்டு, தக்காளி வீணாகாமல் இருக்க அதனை அங்கிருந்த மூதாட்டியிடம் கொடுக்க அறிவுறுத்தினார். அதன்படி அந்த மூதாட்டியிடம் தக்காளி மாலை கொடுக்கப்பட்டது.


Next Story