ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில்  வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை
x

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

திருவாரூர்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பணிகளை தடுத்து நிறுத்தினர்

திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி அன்று அலிவலம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் அங்கீகாரம் பெற்று அமைத்திருந்த வீட்டுமனைப்பிரிவில் பொக்லின் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கனை கொண்டு மேடு, பள்ளங்களை சீரமைத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குன்னியூர் சரக வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், அலிவலம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் ஆகியோர் வேலைகளை தடுத்து நிறுத்தி மண் அள்ளக்கூடாது என கூறினர்.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

அதற்கு ஷாஜகான், 'நான் எனது இடத்தில் மண் எடுத்து எனது இடத்திலேயே கொட்டி சரி செய்கிறேன், விற்பனை ஏதும் செய்யவில்லை' என கூறினார்.

இந்த நிலையில் வருவாய் ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் பொக்லின் எந்திரம் உள்ளிட்ட வாகனங்களின் சாவிகளை பிடுங்கி சென்றனர். மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் வாகனங்களின் சாவிகளை திருப்பி தருவோம் என கூறி உள்ளனர்.

கைது

இதுகுறித்து ஷாஜகான் நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்டவர்களை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ஷாஜகான் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை குன்னியூர் சரக வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவிச்சந்திரனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக ரவிச்சந்திரன், அசோக்குமார் ஆகிய 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவாரூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கில் தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சட்ட ஆலோசகரும், வக்கீலுமான ராஜேந்திரன் ஆஜராகி வாாடினார்.


Next Story