கோர்ட்டில் வாலிபருக்கு வெட்டு; தப்பிச் சென்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்


கோர்ட்டில் வாலிபருக்கு வெட்டு; தப்பிச் சென்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்
x

கோர்ட்டு விசாரணை அறையில் வாலிபரை கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்ற நபரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கோர்ட்டுக்கு கையெழுத்திட வந்தார்

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சந்துரு(வயது 23). இவர் ராமநாதபுரம் சிவஞானபுரத்தில் உள்ள பால் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 13-ந் தேதி கடையில் இவர், இருந்தபோது அந்த பகுதியில் சிலர் தகராறில் ஈடுபட்டதை வேடிக்கை பார்த்துள்ளார். இதனை கண்ட சிவஞானபுரம் அசோக்குமார்(29) உள்பட 3 பேர் கடைக்குள் புகுந்து சந்துருவை தாக்கி அவரின் செல்போனை சேதப்படுத்திவிட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த சந்துரு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவந்தனர்.

இந்த வழக்கில், ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்-2 கோர்ட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் அசோக்குமார் வெளியே வந்தார். இதன்படி தினமும் கையெழுத்திட ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்து சென்றார். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்விரோதம்

இந்தநிலையில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த குமார் என்ற கொக்கிக்குமார்(26) என்பவர், தனது உறவினரான சந்துரு தாக்கப்பட்டதை அறிந்தார்.

இவருக்கும், அசோக்குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது தனது உறவினரையே தாக்கி விட்டதால் ஆத்திரம் அவருக்கு அதிகமானது. இதனால் அவரை பழிதீர்க்க வேண்டும் என்று கருதினார். ராமநாதபுரம் கோர்ட்டுக்கு அசோக்குமார் வருவதை அறிந்த கொக்கிக்குமார் அங்கு வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவருகிறது.

அசோக்குமார் நேற்று கோர்ட்டு விசாரணை வளாகத்தில் கையெழுத்திட நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென்று உள்ளே நுழைந்த கொக்கிக்குமார், தான் கொண்டு வந்திருந்த நீண்ட கத்தியால் சரமாரியாக அசோக்குமாரை வெட்டினார். இதில் தலையில் வெட்டுப்பட்ட அசோக்குமார் தடுக்க முயன்றபோது கையிலும் வெட்டு விழுந்தது. இதனால் கதறி துடித்த அசோக்குமாரை பார்த்து, "வெட்டியது யார்? என்று கேட்டால், கொக்கிக்குமார் என்று சொல்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியில் சென்றார்.

சிதறி கிடந்த ரத்தம்

கோர்ட்டு வளாகத்தின் வெளியில் மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்றிருந்த மற்றொரு வாலிபருடன் ஏறி கொக்கிக்குமார் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். கோர்ட்டிற்குள் வழக்கு விசாரணை அறையிலேயே வாலிபரை வெட்டப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு எற்பட்டது. நீதிமன்ற விசாரணை அறை பகுதி முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயிருக்கு போராடிய அசோக்குமாரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

சம்பவத்தை தொடர்ந்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கோர்ட்டுக்கு சென்று விசாரணை செய்தார். தப்பி ஓடிய கொக்கிக்குமாரையும், அவரை அழைத்து சென்றவரையும் தேடிப்பிடிக்க கேணிக்கரை போலீசார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

சுட்டு பிடித்த போலீசார்

இந்தநிலையில், செல்போன் சிக்னல் மூலம் தன்னை போலீசார் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்த கொக்கிக்குமார் ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் செல்போனை வீசிவிட்டு சென்றுள்ளார். இருப்பினும் அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், உச்சிப்புளி பிரப்பன்வலசை பகுதியில் வைத்து மடக்கினர். அப்போது அவர் ஆயுதத்தால் போலீசாரை தாக்கினார். இதில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.

அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓட முயன்ற கொக்கிக்குமாரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் துப்பாக்கியால் சுட்டார். இதில் கொக்கிக்குமாரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் காயம் அடைந்து விழுந்த கொக்கிக்குமாரை போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காயமடைந்த போலீசாரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சூப்பிரண்டு பேட்டி

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கூறியதாவது:-

கொக்கிக்குமாரை தேடிச்சென்று பிடிக்க முயன்றபோது போலீசாரை ஆயுதத்தால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த போலீசார் தற்காப்பிற்காக கொக்கிக்குமாரை சுட்டதில் காலில் காயமடைந்துள்ளார். கொக்கிக்குமாருக்கு உதவியதாக கூறப்படும் 2 பேரை தேடி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில்...

கொக்கிக்குமார் மீது 13 கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த கொக்கிக்குமார் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி திருப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலைதான் ராமநாதபுரம் வந்துள்ளார். இரவு சூர்யா, பாலா ஆகிய 2 பேரை மதுபோதையில் வெட்டிக் கொல்ல முயன்றுள்ளார். நேற்று அசோக்குமாரை கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டி உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவங்கள் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


Next Story