தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு: பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி


தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு: பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
x

அ.தி.மு.க. பொன் விழாவையொட்டி மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடைபெற்றது.

பொன்விழா எழுச்சி மாநாடு

மாநாடு இலச்சினையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதில், 'வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு' என்ற தலைப்பு இடம் பெற்றது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களும், மதுரையில் இந்த மாநாடு நடைபெறுவதால் வைகை அணை, ஜல்லிக்கட்டு காளை படங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. அவை தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம்

இந்த நிகழ்ச்சியின் போது, எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பிப்பு பணி நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் 2018-ம் ஆண்டு இந்த பணி நடைபெற்றது. தற்போது 5 ஆண்டுகள் ஆனதையொட்டி இரண்டரை மாதங்களுக்கு முன்பு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பிப்பு பணி தொடங்கியது.

இப்பணியை சிறப்பாக மேற்கொண்டதால் இன்றைக்கு அ.தி.மு.க.வில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது வரலாற்று சாதனை ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே 75 நாட்களில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட பெருமை அ.தி.மு.க.வுக்குதான் உண்டு என்பதை கட்சியினர் நிருபித்து காட்டி இருக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை என்பதை நிருபித்து காட்டி இருக்கிறோம். தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க.தான். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது.

சில பேர் இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும். முடக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். தி.மு.க.வின் 'பி' டீம்மாக இருந்து செயல்பட்டார்கள். அ.தி.மு.க. உடையவில்லை, சிந்தவும், சிதறவும் இல்லை. இது கட்டுகோப்பான இயக்கம் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் அவர்களுக்கு நிருபித்து காட்டி உள்ளோம். அடுத்து வர உள்ள தேர்தலுக்கு (நாடாளுமன்ற தேர்தல்) அடித்தளமாக மதுரையில் நடைபெற உள்ள எங்களுடைய வீர வரலாறு பொன் விழா எழுச்சி மாநாடு அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'மாமன்னன்' படம் பற்றி...

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறதே....

பதில்:- தக்காளி கிலோ ரூ.160-க்கு போய் விட்டது. சின்ன வெங்காயம் ரூ.150, பூண்டு ரூ.150, துவரம் பருப்பு ரூ.150 ஆகி விட்டது. மளிகை பொருட்கள் அனைத்துமே கிட்டத்தட்ட 70 சதவீதம் உயர்ந்துவிட்டது. இது பற்றி முதல்-அமைச்சருக்கு கவலை இல்லை. குட்டி அமைச்சர் (உதயநிதி ஸ்டாலின்) எடுத்த படம் (மாமன்னன்) எப்படி ஓடுகிறது? என்பதுதான் கவலை. தற்போது 'மாமன்னன்' படம் ஓடினால் என்ன, ஓடாவிட்டால் என்ன?. இதுவா, வயிற்று பசியை போக்க போகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது உண்மை இல்லை, பொய். நான் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கவர்னரின் உத்தரவின்படி அன்றைய சபாநாயகர் தனபால் சட்டமன்றத்தை கூட்டினார். தனபால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அவரை இருக்கையில் இருந்து கீழே தள்ளி, மைக்கை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டு அவரது புனிதமான இருக்கையில் அமர்ந்த கட்சிதான் தி.மு.க.

எனவே தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை பற்றி பேச தி.மு.க. தலைவருக்கும், அந்த கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான்.

பா.ஜ.க.வுடன் உறவு எப்படி

கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறதா?

பதில்:- இப்போது தேர்தல் இல்லையே! தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேர்தல் வருகிற போது நிச்சயம் உங்களை (பத்திரிகையாளர்கள்) எல்லாம் அழைத்து எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம். பா.ஜ.க. பற்றி நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம்.

கேள்வி:- கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தலைமை தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறாரே...

பதில்:- நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எப்படி கூட்டணி அமைத்தார்களோ, அதே போன்று காலம் கனிந்து, நேரம் வரும் போது நிச்சயம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவோம். பா.ஜ.க.வுடன் உறவு எப்படி இருக்கிறது? என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்த போது, 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், 'அ.தி.மு.க. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை படித்து பாருங்கள். அதில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம்' என்று பதிலளித்தார். சிறுபான்மையினரின் மத உரிமையை பறிக்கும் வகையில் ஒரே சீரான சட்ட கொண்டுவர அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

எனவே எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து மூலம் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு என்பது தெளிவாகி உள்ளது.

தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

2019-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதசார்பின்மை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு வருமாறு:-

பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்பு சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது. ஒவ்வொரு நபரும் அவரின் விருப்பத்துக்குரிய மதத்தை பின்பற்றுவதற்கும் மற்றும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26-ம் பிரிவுகளுக்கு அ.தி.மு.க. உரிய மதிப்பு அளிக்கிறது.

இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில் ஒரே சீரான உரிமையியல் விதி தொகுப்புக்காக அரசமைப்பு சட்டத்தில் எந்தவித திருத்தங்களையும் கொண்டு வர வேண்டாம் என்று மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

இவ்வாறு தேர்தல் வாக்குறுதி இடம் பெற்றது.


Next Story