திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை


திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,


திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 1965-ம் ஆண்டு முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு ஏனாதிமங்கலம், சிறுவானூர், தக்கா, அரசூர், டி.குமாரமங்கலம், ஆனத்தூர், இருவேல்பட்டு, பேரங்கியூர், மடப்பட்டு, மாதம்பட்டு, பெரியசெவலை, சரவணம்பாக்கம், டி.கொளத்தூர், ஆமூர், டி.எடப்பாளையம், சித்தலிங்கமடம், டி.புதுப்பாளையம், டி.எடையார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய வசதி இல்லை. இதனால் திருவெண்ணெய்நல்லூர் மாடவீதியில் திறந்த வெளியில் விவசாயிகள் கொண்டு வரப்படும் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான நெல்மூட்டைகள் வீதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மழையில் நனைந்தன

இந்த நிலையில் நேற்று மதியம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மாடவீதியில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் அனைத்தும் நனைந்தன. இதுபற்றி அறிந்த விவசாயிகள், விரைந்து வந்து தங்களது நெல்மூட்டைகளை தார்ப்பாயால் மூடினர். இருப்பினும் சில மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மழை காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றன. மற்ற நேரங்களில் ஆடு மாடுகள் நாசம் செய்கின்றன. திருடர்கள் நெல் மூட்டைகளை திருடிச் செல்கின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாற்று இடத்தில் இயங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story