பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்களை மேம்படுத்த நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
நிதிஉதவி
பாரத பிரதமரால் 2020-21-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட "ஆத்ம நிர்பார் பாரத் அபியான்" திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுனங்களை வலுப்படுத்தும் விதமாக "பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். 2020-21-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது, மத்திய அமைச்சகத்தின் உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.
மாவட்ட கலெக்டரின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
விருப்பம் உள்ள தொழில்...
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அதற்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி. மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதியதாக உணவு பதபடுத்தும் தொழில் தொடங்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் உணவு பதப்படுத்தும் தொழில் தொடர்பான விவரங்களுக்கு பெரம்பலூர் வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) 9865529676 என்ற செல்போன் எண்ணிலும், பெரம்பலூர் வேளாண்மை அலுவலர் (வே.வ) 9942381099 என்ற செல்போன் எண்ணிலும், மற்றும் மாவட்ட தொழில் நுட்ப அலுவலரை 9965737555 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை பெரம்பலூர் வேளாண்மை துணை இயக்குனர் (வே.வ) சிங்காரம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.