விராலிமலை, இலுப்பூர், காரையூர் பகுதிகளில் மீன்பிடி திருவிழா


விராலிமலை, இலுப்பூர், காரையூர் பகுதிகளில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மீன்பிடி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் அசைவ பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட குளங்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் விராலிமலை ஒன்றியம் ராஜகிரி ஊராட்சிக்குட்பட்ட குளவாய்பட்டி மதிய கருப்பர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கருங்குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதாக கடந்த ஒரு வாரமாக சமூகவலைதளங்கள் மூலமாக தகவல் பரவியது.

குளத்தில் திரண்டனர்

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்தே ராஜகிரி குளவாய்பட்டி, விராலிமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் குளத்தில் திரண்டனர். காலை 6.30 மணியளவில் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசியவுடன் கரையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தூரி, வலை, கச்சா, பரி, கூடை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களுடன் குளத்திற்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை தேடினர்.

இதில் குரவை, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவே கிடைத்தது. அதை அவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து உண்டு மகிழ்ந்தனர். இதில் ஒரு சில பேரை தவிர மற்றவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சிலர் இரவோடு இரவாக மீன்களை பிடித்து சென்று விடுவதால் குறைந்தளவே மீன்கள் கிடைத்தன. எனவே வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் ஊர் முக்கியஸ்தர்கள் குளங்களில் காவலுக்கு ஆட்களை அமர்த்தி பாதுகாக்க வேண்டும் என்று கூறினர்.

அய்யனார் கோவில் குளம்

இலுப்பூர் அருகே உள்ள புங்கினிபட்டி காலாம்பூர் அய்யனார் கோவில் குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசியவுடன், குளத்து கரையில் கூடியிருந்த திரளான பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலைகளை வீசி மீன்களை பிடித்து சென்றனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, கெளுத்தி, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் அந்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மீன் குழம்பு வாசனை

காரையூர் அருகே உள்ள ஒலியமங்களம் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காயாம்பட்டி, வெள்ளாளப்பட்டி, வேங்கம்பட்டி, சுந்தம்பட்டி, பொன்னமராவதி, காரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கண்மாயில் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர்.

இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. இதில் கட்லா வகை மீன்கள் ஒரு மீன் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை இருந்தன. அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதனால் விராலிமலை, இலுப்பூர், காரையூர் பகுதிகளை சேர்ந்த கிராம மக்களின் வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story