மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
x

சாயல்குடி அருகே பல கிராமங்களில் மக்காச்சோளபயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே பல கிராமங்களில் மக்காச்சோளபயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

விவசாய பணி

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயம் மற்றும் மிளகாய், சோளம், குதிரைவாலி, பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பல பயிர்கள் பயிரிடுவதிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை, சத்திரம், கருங்குளம், மலட்டாறு, கடலாடி உள்ளிட்ட பல ஊர்களிலும் மக்காச்சோள பயிர்கள் நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

லேசாக மழை

இதுபற்றி கடுகுசந்தை கிராமத்தை சேர்ந்த விவசாயி சசிகுமார் கூறியதாவது:- ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மக்காச்சோளத்திற்கான விதை விதைக்கும் பணி தொடங்கப்படும். சோளத்திற்கான விதை விதைக்கும் போது ஓரளவு மழை பெய்ய வேண்டும். அந்த செடிகள் வளரும் சூழ்நிலையிலும் லேசாக மழை பெய்தால் போதும்.

அதன் பிறகு சோளப்பயிர்கள் வளர அதிக மழை தண்ணீர் தேவை இல்லை. சாயல்குடி அருகே கடுகு சந்தை, சத்திரம், மலட்டாறு, கடலாடி கருங்குளம் என பல ஊர்களிலும் மக்காச்சோளம் விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த ஆண்டு மக்காச்சோளம் அதிக விளைச்சல் இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை. 1 கிலோ மக்காச்சோளம் 15 ரூபாய்க்கு மட்டுமே விலை போனது. மிகவும் கஷ்டப்பட்டு சோளபயிர்களை விதைத்து அறுவடை செய்த பின்னரும் எதிர்பார்த்த அளவு விலை இல்லாததுடன் லாபம் கிடைப்பது கிடையாது.

விவசாய நிலத்தை அப்படியே போட்டு பாழாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஆண்டுதோறும் இந்த சோளப்பயிர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதில் பெரிய அளவில் லாபம் கிடைப்பது கிடையாது.

அறுவடை

இது குறித்து மத்திய-மாநில அரசுகள் கஷ்டப்பட்டு உழைத்து மக்காச் சோளப் பயிர்கள் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இனியாவது சோள பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காசோள பயிர்களில் விளையும் சோள கதிர்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story