போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.87½ லட்சம் மோசடி
திருச்சியில் போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் ரூ.87½ லட்சம் மோசடி செய்த முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் ரூ.87½ லட்சம் மோசடி செய்த முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
வங்கியில் ரூ.87½ லட்சம் மோசடி
திருச்சி பாரதியார் சாலை ஜென்னிபிளாசாவில் உள்ள இந்தியன் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீமதி. இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
தற்சமயம் மேலசிந்தாமணி காவேரிநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் சில வாடிக்கையாளர்களின் ஆவணங்கள்போல் போலியான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து, பணம் மற்றும் தங்க நகைக்கடன் மூலமாக ரூ.87 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ஆகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
முன்னாள் மேலாளர் கைது
இந்த மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கோசலைராமன் இதுகுறித்து வழக்குப்பதிந்து முன்னாள் மேலாளர் சண்முகராஜாவை கைது செய்தார். இந்த மோசடி எதிரொலியாக சண்முகராஜா வங்கியில் இருந்து ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.