லஞ்ச வழக்கில் கைதான ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
கரூரில் லஞ்சம் வாங்கியதாக ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரை:
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் தொழில் தொடங்குவதற்கு ஜி.எஸ்.டி. ஆர்.சி. எண் பெற இணையதளத்தில் விண்ணப்பித்தார். இந்த எண் வழங்குவதற்கு கரூர் ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டர் சுபேசிங் என்பவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று அய்யப்பன் கூறியதால் ரூ.5 ஆயிரம் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யப்பன், இதுகுறித்து மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரையின்படி சுபேசிங்கிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அய்யப்பன் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. போலீசார் சுபேசிங்கை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்தனர். அவரை மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தமிழரசி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.