மிகத்தீவிர புயலாக மாறிய 'ஹமூன்'- தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


மிகத்தீவிர புயலாக மாறிய ஹமூன்- தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 24 Oct 2023 8:32 AM GMT (Updated: 24 Oct 2023 8:35 AM GMT)

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்.

இது புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறியிருந்தது. இந்த புயலுக்கு ஹமூன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புயல் மிகத்தீவிர புயலாக உருமாறியுள்ளது. இதனால் வடகிழக்கு வங்ககடலில் சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி , மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story