ஈரோடு வாவிக்கடையில் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டைகள்; அதிகாரி தகவல்


ஈரோடு வாவிக்கடையில்  கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டைகள்;  அதிகாரி தகவல்
x

ஈரோடு வாவிக்கடையில் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

ஈரோடு

ஈரோடு வாவிக்கடையில் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

மண்சரிவு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன திட்டமாக இருப்பது கீழ்பவானி வாய்க்கால். இங்கு பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வயல்வெளிகளில் நீர் பாசனம் நடந்து வருகிறது. அணையில் இருந்து தற்போது கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் முதன்மை வாய்க்கால் எனப்படும் ராஜவாய்க்கால் வழியாக பாய்ந்து கிளை மற்றும் கொப்பு வாய்க்கால்களுக்கு செல்கிறது.

அதன்படி ஈரோடு அருகே உள்ள வாவிக்கடை பகுதியில் (58-வதுமைல்) வாய்க்காலின் கரைகளை தொட்டுக்கொண்டு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இங்கு வாய்க்காலை ஒட்டி உள்ள கசிவுநீர் போக்கி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த கசிவுநீர் போக்கி, வாய்க்காலின் ஒரு கரையை ஒட்டி இருப்பதால் இந்த மண்சரிவு வாய்க்கால் கரைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற அபாய சூழலில் இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரி செய்து உள்ளனர்.

மணல் மூட்டைகள்

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்கால் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது கரைகள் பலம் இழந்து இருப்பதால், ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த உடைப்புகளை சரி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் தயார் நிலையில் உள்ளோம். தற்போது ஏற்பட்டு இருக்கும் உடைப்பு கரையை ஒட்டி உள்ள கசிவுநீர் போக்கியில் ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு உள்ளது. ஒரு வேளை இந்த மண்சரிவு கவனத்துக்கு வரவில்லை என்றால் வாய்க்கால் கரை உடைப்பாக மாறி இருக்கும்.

சம்பந்தப்பட்ட பகுதியில் கசிவு நீர் செல்லும் இடத்தில் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏற்பட்ட சரிவு மிகவும் அபாயகரமானதாகும். ஆனால், ஆபத்தான கட்டத்துக்கு முன்பு 500 முதல் 600 மணல் மூட்டைகள் போட்டு சரி செய்யப்பட்டு உள்ளது. மேலும் மணல் மூட்டைகள் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை

இதற்கிடையே கடந்த 25-ந் தேதி கோபியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள், கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கீழ்பவானி வாய்க்கால் பாசன திட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டு உத்தரவுகளையும் எடுத்துக்கூறி விளக்கம் அளித்து உள்ளனர்.


Next Story